Published : 20 Sep 2021 05:02 PM
Last Updated : 20 Sep 2021 05:02 PM

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 வயதுக் குழந்தையுடன் 2 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி

கரூர்

கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு 2 வயதுக் குழந்தையுடன் வந்த 2 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (செப். 20-ம் தேதி) 1 குழந்தை மற்றும் சிறுவர், சிறுமியுடன் வந்திருந்த 2 பெண்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தங்களுடன் வந்திருந்த 2 வயதுக் குழந்தை மற்றும் சிறுமி, சிறுவன் மீது ஊற்றியும் தீக்குளிக்க முயன்றனர். இதனைக் கண்ட போலீஸார் அவர்களைத் தடுத்துக் காப்பாற்றி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வெள்ளியணை வடபாகம் தேவேந்திரர் நகரைச் சேர்ந்த கே.பெரியசாமியின் மனைவி சரஸ்வதி (33), மகள் நிஷாதேவி (13), மகன் கோகுல் (10) ஒரு குடும்பம் என்பதும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் கவுசல்யா (26), அவரது 2-வது மகன் ரிதீக் (2) என்பதும் தெரியவந்தது.

பெரியசாமி மற்றும் முருகானந்தம் அப்பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களிடம் தனித் தனியாகக் கடன் பெற்றுள்ளனர். அப்போது அடமானமாக இலவச வீட்டுமனைப் பட்டாவைக் கொடுத்துள்ளனர். அண்மையில் பணத்தைக் கொடுத்து பட்டாவைக் கேட்டபோது, அதில் தாங்கள் வீடு கட்டப்போவதாகக் கடன் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், அதனைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றதாக சரஸ்வதி, கவுசல்யா ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை விசாரணைக்குத் தாந்தோணிமலை போலீஸார் அழைத்துச் சென்றனர். மேலும் சரஸ்வதி, கவுசல்யா ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x