

சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்தில் இறந்தவர்களில் மொத்தம் 6 பேரின் உடல்கள் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமையன்று வந்தன. ஒரிசாவை சேர்ந்த அமர்குமார்(25), நிரஞ்சன்கரோ(35), அலி(19) மற்றும் சென்னையை சேர்ந்த கே.லோகநாதன்(45), கணேசன்(38), விழுப்புரம் மாவட்டம் இளையனார்குப்பத்தை சேர்ந்த அன்பழகி(29) ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட உறவினர்களிடமும் காப்பாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டன. ஒரிசாவை சேர்ந்த 3 தொழிலாளர்களின் உடல்களை கட்டிட பணியில் ஈடுபட்டு வந்த சப் கான்ட்ராக்டர் மனோஜ் பெற்றுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மனோஜ் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான், இவர்களை பிளம்பிங் பணிக்காக அழைத்து வந்தேன். சனிக்கிழமையன்று மாலையில் பணியை முடித்து விட்டு, சம்பளம் வாங்க காத்துக் கொண்டு இருந்தோம். அப்போது, திடீரென பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது, டீ குடிக்க செல்லலாம் என்று நண்பர்களை அழைத்தேன். மழை பெய்கிறது, நாங்கள் வரவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால், நான் மட்டும் சென்று டீ குடித்து விட்டு கட்டிடம் நோக்கி வந்து கொண்டு இருந்தேன். அப்போது, என் கண்முன்னே, அந்த 11 மாடி கட்டிடம் மட, மட வென சரிந்தது என்றார்.
11 மாடி கட்டிடம் அருகே பக்கத்தில் வீட்டில் வசித்து வந்தவர் கணேசன்(42). இவர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு புனிதா(4) என்ற பெண் குழந்தை உள்ளது. மாரியம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அடுக்குமாடி இடிந்து பின்புறத்தில் இருந்த வீட்டின் மேல் விழுந்ததில், தூங்கி கொண்டிருந்த கணேசன் கட்டிட இடுபாட்டில் சிக்கி இறந்துள்ளார்.
இது தொடர்பாக அவருடைய மனைவி மாரியம்மாள் கண்ணீர் மல்க கூறுகையில், ‘‘வழக்கமாக மாலையில் அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். பின்னர், சாப்பிட்டு ஓய்வெடுப்பார். அப்படித்தான் சனிக்கிழமையன்றும் மாலையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தார். அப் போது, திடீரென இடியுடன் மழை பெய்ததால், எங்க ளது குழந்தை வெளியே சென்றாள். குழந்தையை கூப் பிட்டு வர, நான் வெளியே சென்றேன். சுமார் 5 நிமிட நேரத்தில்தான் கட்டிடம் திடீரென விழுந்தது. வந்துபார்த் ததும், என் உயிரே போய்விட்டது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதை படிக்க வைக்க வேண்டும். இருந்த வீடும் போய்விட்டது. எனவே, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்’’ என முடித்தார்.
கணவரின் கதி என்ன? இன்னும் தெரியவில்லை;
விழுப்புரம் மாவட்டம் இளையனார்குப்பத்தை சேர்ந்த அன்பழகி(29). இவருடைய கணவர் குமார்(32) இரண்டு பேரும் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். இதில், தற்போது அன்பழகி இறந்தது உறுதியாகியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக அன்பழகி உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக அன்பழகியின் சித்தி மகேஸ்வரி கூறுகையில், ‘‘அன்பழகியும், அவருடைய கணவர் குமாரும் கடந்த 2 ஆண்டுகளாக கட்டிட பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஆண் பிள்ளையும், 15 வயதில் பெண் பிள்ளையும் உள்ளது. இவர்கள் அன்பழகியின் அம்மா சடச்சி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இருவரும் நல்ல உழைப் பாளிகள். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்த்து மகிழ்ச்சி யடைவார்கள். அன்பழகி இறந்துள்ள செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து இங்கு வந்துள்ளோம். ஆனால், அவருடன் பணியாற்றிய கணவரின் நிலை குறித்து இதுவரையில் எதுவும் தெரியவில்லை. அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறேன். கடவுளிடமும் வேண்டிக் கொள்கிறோம்’’ என்றார்.