கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் தொழிலாளி தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளரகள் உள்ளிட்ட பணிகளைத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-வது தளத்தில் பிரசவ வார்டு உள்ளது. கரூர் காந்திகிராமம் முல்லை நகரைச் சேர்ந்தவர் நவீன் (25). சுயதொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பவித்ரா (22). பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ராவுக்கு கடந்த 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

நவீன் அவரது சகோதருடன் குழந்தையைப் பார்ப்பதற்காக நேற்றிரவு 10.30 மணிக்கு பிரசவ வார்டுக்கு வந்துள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமி (47) இரவு 10 மணிக்கு மேல் ஆண்களை வார்டுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் ஜெயலட்சுமியைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார். மேலும், பசுபதிபாளையம் போலீஸில் புகார் அளித்தார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜெயலட்சுமியைத் தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை வழங்க வேண்டும் எனக் கோரி 40 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று (செப்.20-ம் தேதி) காலை ஈடுபட்டனர்.

இதையடுத்து உள்ளுறை மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) முருகேசன் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 45 நிமிடப் போராட்டத்தைக் கைவிட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் நவீன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in