புதுவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம்: ஆர்ஜிதப் பணிகளைத் தொடங்கிய தமிழக அரசு

புதுவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம்: ஆர்ஜிதப் பணிகளைத் தொடங்கிய தமிழக அரசு
Updated on
1 min read

புதுச்சேரி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம் தர ஆர்ஜிதப் பணிகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் ஆயிரத்து 502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும். ஓடுதளம் 3 ஆயிரத்து 300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக ஆயிரத்து 800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்காவைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுக்கும் புதுச்சேரி அரசின் சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணன் இதற்கான கூட்டத்தை விமான நிலையத்தில் நடத்தியிருந்தார்.

ஆளுநர் தமிழிசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி, நிலம் கையகப்படுத்தி வழங்க கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தினார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகப் புதுவை அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக உள்ள நிலை தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "தமிழக அரசு முதல் கட்டமாக 106 ஏக்கர் நிலத்தைப் புதுவை அரசுக்குக் கையகப்படுத்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியபோது, நில ஆர்ஜித நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஆர்ஜிதம் செய்த பின்பு அதற்கான தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான முதல் கட்ட நில ஆர்ஜிதப் பணிகள் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்து பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in