

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அடகு வைக்கவே மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் அண்ணா அறிவாலயம் முன்பு இன்று காலை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பும், எம்.பி. கனிமொழி சிஐடி காலனியிலும் போராட்டங்களை நடத்தினர்.
திமுக போராட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையைக் கடந்த இரண்டு மாதங்களில் 50 ரூபாய் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது.
நாங்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், பெட்ரோல் விலையைக் குறைத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க அந்நிறுவனங்களை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது. ஆனால், பாஜக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அடகு வைக்கவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே இவற்றுக்குகெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது” என்றார்.