

மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்றுவீடுகள் முன்பு கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலைஉயர்வு, விலைவாசி உயர்வு,பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று வீடுகள் முன்பு கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய பாஜகஅரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக மாவட்ட, ஒன்றிய, நகர,பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சிநிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தோழர்களுடன் இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அவரவர் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர் கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத,ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடக்கும் போராட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.