Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு உயர்வு; ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்குப் பிறகு அரசாணை வெளியானதால் வாய்ப்பு பறிபோனது: ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என பி.எட். பட்டதாரிகள் வேதனை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்புக்குப் பிறகு, அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்ட அரசாணை வெளியானதால், அத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர் 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 எனவயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டபோதே பி.எட். பட்டதாரிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, "திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததால், வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, நேரடி நியமனப் பணிகளில் வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அரசாணை அன்றே வெளியானது.

அதில், அரசாணை வெளியான நாளுக்குப் பின்னர் வெளியாகும் அறிவிப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 18-ம் தேதி தொடங்கியது. அதேசமயம், வயது வரம்பு தளர்வு தொடர்பான அரசாணை 13-ம் தேதிவெளியானதால், வயது வரம்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளவில்லை.

இதனால், இந்த அரசாணையின் பயன், 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகளுக்கு கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அரசாணையின் பயன்களை, சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகள் நூலிழையில் தவறிவிட்டுப் பரிதவிக்கிறார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த தேர்வுக்கு பொருந்தும்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் (டிஆர்பி) தலைவர் ஜி.லதாகூறும்போது, "முதுகலை ஆசிரியர்தேர்வுக்கான அறிவிப்புக்குப் பிறகே,நேரடி நியமனப் பணிகளுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணை வெளியானது.

எனவே, இந்த அரசாணை தற்போதைய முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு பொருந்தாது. எனினும், ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்து வெளியிடும் தேர்வுகளுக்குப் பொருந்தும். இப்போது விண்ணப்பிக்க இயலாத தேர்வர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெறுவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x