Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்- திமுக, அதிமுக கூட்டணிகளில் வார்டுகள் பங்கீட்டில் இழுபறி நீடிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீட்டில் திமுக, அதிமுக கூட்டணிகளில் இழுபறி நீடித்து வருகிறது. வார்டுகள் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக நிர்வாகிகள் நேற்று ஆலோசித் தனர். தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பாமகவும் சில மாவட்டங்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழகவாழ்வுரிமை கட்சி ஆகிய 9 கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் வார்டுகள் பங்கீடு குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 4 வார்டுகளையும், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகளையும், மற்ற 7 மாவட்டங்களில் ஒன்றியத்துக்கு 2 வார்டுகள், தலா ஒரு மாவட்ட ஊராட்சி வார்டுகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது. மதிமுக, இடதுசாரி கட்சிகளும் கணிசமான வார்டுகளை கேட்கின்றன.

திருவெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியும் கணிசமான வார்டுகளை கோரி வருகின்றன. இதனால் திமுககூட்டணியில் வார்டுகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

பாஜகவுடன் பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணியில் வார்டுகள் பங்கீடு தொடர்பாக கடந்த17-ம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேற்று காலை பேச்சு நடத்தினர். ஒன்றியத்துக்கு 4 வார்டுகளையும், தலா 2 மாவட்ட ஊராட்சி வார்டுகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவுக்கு வரும் என்று திமுக, அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிமுக-பாமக கூட்டணி?

வட மாவட்டங்களில் கனிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் வென்றது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்காமல், ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகத் தயாராகிவிட்டதாக பலரும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட உள்ளதாக கடந்த 14-ம் தேதி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த முடிவை பாமகவினர் வரவேற்றாலும், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனித்துப் போட்டியிடும் முடிவைக் கைவிட்டு,அதிமுகவுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாமக நிர்வாகிகள் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள அதிமுக-பாமகவினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் மக்களிடம் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர் மட்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்று பேசி வருகின்றனர். இது நல்லதுதான். இரண்டு கட்சிகளும் போட்டியிட்டால் வாக்குகள் பிரியும். அது மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x