

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 56 சதவீதத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது மெகா தடுப்பூசி முகாமை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
மேலும், மத்திய அரசு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 1000 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி அலகு மற்றும் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 667 எல்பிஎம் திறன்கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி அலகு ஆகியவற்றையும் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 27,94,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது இந்திய அளவில் மிகப் பெரிய தடுப்பூசி முகாமாக அமைந்தது. இன்றைய நிலையில், 16 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன. எனவே, 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்னும் இலக்குடன் 2-வது சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
கரோனா 3-வது அலை வராது, வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீத அடிப்படையில், கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29,27,149 பேர் உள்ள நிலையில், இதுவரை 22,04,631 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை 25 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக கோவை திகழ்கிறது. கேரள மாநிலத்தில் ஜிகா, நிபா வைரஸ் தொற்றுநோய் பரவிய நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ஆகியோருடன் வாளையாறு பகுதிக்கு நேரடியாக சென்று, அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொசு ஒழிப்பு நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கோவாக்சின் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 56 சதவீதத்தைக் கடந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், நிர்ணயிக்கப்பட்டதைவிட 15 ஆயிரம் தடுப்பூசிகளை கூடுதலாக செலுத்தி, தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. அதிகம் பேருக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக மருந்தின் அளவை குறைப்பதில்லை.
கோவாக்சின் தடுப்பூசி குறைவாகவே வருவதால், முதல் தவணை செலுத்தப்படுவது தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை வேண்டுவோருக்கு மட்டும் செலுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் கூடுதலாக கேட்டு வருகிறோம்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வாடகைக் கட்டிடத்தில் நடத்த முடியாது
ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்காலிக இடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்து மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை முடித்து, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளில் 1,650 மாணவர்கள் சேரவுள்ளனர். இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு என 50 மாணவர்களை சேர்த்து, வாடகைக் கட்டிடம் எடுத்து படிக்க வைப்பது என்பது மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் பெருமைக்கு உகந்ததாக இருக்காது.