விமான நிலையம், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி: குமரியில் ஏற்படுத்த விஜய் வசந்த் எம்.பி. உறுதி

மார்த்தாண்டம் அருகே இலவுவிளையில் நடைபெற்ற வளர்ச்சி பணி ஆலோசனைக்  கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றனர்.
மார்த்தாண்டம் அருகே இலவுவிளையில் நடைபெற்ற வளர்ச்சி பணி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றனர்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த இலவுவிளையில் குமரி மகாசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். விஜய் வசந்த் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கன்னியாகுமரியில் விமான நிலையம், சுற்றுலா மேம்பாடு, தொழில்நுட்ப பூங்கா, புதிய நவோதயா பள்ளி, கேந்திர வித்யாலயா பள்ளி அமைத்தல், சாலை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., பேசும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைப்போல ஹெலிகாப்டர் தளம், ஹெலி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் சார்ந்த பகுதிகள் மட்டுமின்றி மலை சார்ந்த பகுதிகளையும் நவீனப்படுத்தி சுற்றுலா பயணிகளை கவர முயற்சி நடைபெறுகிறது. நவோதயா பள்ளி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அல்லது குழித்துறையை மையமாக வைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குமரியில் டெக்னோபார்க் எனும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படும். சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் சுவாமி கருணானந்த மகராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கட்பட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in