

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, புதினம், வசன கவிதை என்ற இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கிய சிற்றிதழ் ‘மணிக்கொடி’. அந்த இதழுக் கான பல படைப்புகள் உருவான கரு வூலம், குடந்தையில் உள்ள மகாமகக் குளத்தின் படித்துறை, மகாபாரதத்தின் கிளைக்கதையை மையமாக வைத்து எம்.வி.வெங்கட்ராம் படைத்த ‘நித்யகன்னி’, புதினமாக வடிவம் பெற்ற இடம் மகாமகக் குளக்கரைதான்.
‘‘கும்பகோணத்தில் கு.ப.ரா.வின் வீட்டிலும், மகாமகக் குளப் படித் துறையிலும் இலக்கிய நண்பர்களும் எழுத்தாளர்களும் அடிக்கடி கூடி சர்ச்சை செய்வது வழக்கம். தி.ஜானகிராமன், ரா.நாராயணசாமி (கரிச்சான் குஞ்சு), கி.ரா.கோபாலன், இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் இந்த கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வோம்’’ என்று ‘நித்யகன்னி’ பிறந்த கதை பற்றி அதன் முன்னுரையில் எம்.வி.வி. குறிப்பிடுகிறார். குடந்தையின் நடுவே பரந்து விரிந்த சுமார் 20 ஏக்கர் அளவுள்ள மகாமகக் குளத்தின் படிக்கட்டுகள் பல இலக்கியப் படைப்பாளிகளின் சரணாலயமாக விளங்கியிருப்பதை அறிய முடிகிறது.
பொதுவாக, கோயில்களின் நகரமாக அறியப்படும் கும்பகோணம் ‘குளங்களின் நகரம்’ என்றால் மிகையாகாது. மகாமகக் குளம், பொற்றாமரைக்குளம், ஆயிகுளம், பிடாரிகுளம், சேய்குளம், உப்புகுளம், பச்சையப்பர் குளம், சர்ச் குளம், ஆதிகும் பேசுவரர் திருக்கோயிலில் உள்ள திருக் குளம் என எண்ணற்ற பெரிய குளங்கள் நகரின் நடுவே அமைந்துள்ளன. இந்த குளங்களுக்கு நீர் வருவதற்கும், வெளி யேறுவதற்கும் தனித்தனியாக கால்வாய் கள் இருந்து வந்துள்ளதை நகர வரை படங்கள் காட்டுகின்றன. இவற்றை குடந்தை நகர முன்னோர்கள் இன்றைய தலைமுறைக்கு விலை மதிக்க முடியாத சொத்தாக விட்டுச்சென்றுள்ளனர்.
பொதுவாக, ஆறுகள் ஓடாத நிலப் பரப்பில்தான் ஏரிகளும், குளங்களும் அதிகமாக வெட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், கும்பகோணத்தில் வடக்கில் காவிரி, தெற்கில் அரசலாறு என்ற இரு நதிகள் எல்லைக்கோடுகளாகப் பாய்ந்து நிலச் செழிப்பும் நீர்வளமும் பெருக்கி வருகின்றன.
இந்த இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட சமதளமான பூமிப் பரப்புதான் கோயில் நகரமாகும். ஆறுகள் ஓடி வளம் சேர்த்தாலும், ஊரின் நடுவே குளங்களை வெட்டி அமைத்து ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்’ நாளிலும் நிலத்தடி நீர்வளம் காத்திட்ட தலைமுறையினர் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர். இந்நகரில் அமைந்துள்ள குளங்கள் மக்களின் குடிநீர், அன்றாடப் பயன்பாடுகளுக்குத் தேவையான தண்ணீரை வழங்கும் அமுத சுரபிகள். கும்பகோணத்தை ஒருமுறை வலம் வந்து பார்த்தால் நிலத்தடி நீர்வளம் பெருக்கிட அன்றைய தலைமுறையினர் குளங்களை வரங்களாக வழங்கி மனித குலம் வளமோடு வாழ வழிவகுத்து தொலைநோக்கோடு செயல் பட்டிருப்பதை அறியலாம்.
நீர் மேலாண்மைத் திருநாள்
பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகக் குளத்தை தூர்வாரி, சேற்றினை அகற்றி, மணல் நிரப்பி அதில் உள்ள கிணறுகளைச் சுத்தம் செய்து குளத்துக்கு நீர் வருகிற, வெளியேறுகிற கால்வாய்ப் பாதைகளை சீர்படுத்துவது மகாமகத் திருவிழாவின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகும். இது ஆன்மிகத் திருநாள் என்ற நிலையில் மட்டுமின்றி ஊர்மக்கள் பயன்படுத்தும் ஒரு நீர்நிலையை மக்கள், அரசு என இரு தரப்பும் சேர்ந்து சீர் செய்யும் நீர் மேலாண்மைத் திருநாள் என்றே கூறலாம்.
வைணவர்களின் புனித குளமான பொற்றாமரைக் குளமும் இத்திரு நாளில் தூர்வாரி சீர்படுத்தி செப்பனிடப் படுகிறது. இக்குளமும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு களமாக விளங்கி யிருப்பதற்கு ‘வேள்வித் தீ’ புதினமே சான்று. அக்கதையின் நாயகி கையில் ஒரு குழந்தையோடும் கருவில் ஒரு குழந்தையோடும் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி வாழ்வை முடித்துக்கொள் வதாக புதினம் முடிவடையும்.
அயல்நாட்டினர் பதிவுகள்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டயானா ஏக் என்பவர் காசி, வாரணாசி போன்ற கோயில் நகரங்களில் பல ஆண்டுகள் தங்கியிருந்து இந்திய மக்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இந்தியவியல் அறிஞர். அவரது ‘இந்தியா: ஒரு புனித நிலப்பரப்பு’ என்ற ஆய்வு நூலில் மகாமகக் குளம் பற்றிய சிறப்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நீராடல் திருவிழாக்கள் கங்கை, யமுனை நதிக்கரைகளில் நிகழ்வது மரபு. ஆனால், நதிக்கரைப் புனித நீராடல்களுக்கு மாறாக சுமார் 20 ஏக்கர் அளவுள்ள சதுர வடிவ குளக்கரையில் மகாமகம் விழா நடப்பதை வியப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகச்சிறிய ஊரான கும்பகோணம் எவ்வாறு பல லட்சம் பக்தர்களை வரவேற் றுப் புனித நீராடல் நிகழ்வில் பங்கேற்கச் செய்து உணவளித்து, வழியனுப்பி வைக்கிறது என்பதே வியப்பிலும் வியப்பாக இருக்கிறது என்றும் பதிவு செய்துள்ளார்.
நூற்றாண்டு விழாக்கள் கண்ட வங்கியும், வங்கி சாரா நிதி நிறுவனங் களும் ஆங்கிலேயர் காலத்திலேயே கும்பகோணம் மக்களால் தொடங்கப்பட்டு இன்றளவும் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ற நிறுவனங்களாக வளர்ந்து பலரையும் வாழ்வித்து வருகின்றன.
அந்நாளில் ஆங்கிலேய அரசினர் அடையாளம் கண்டறியாத வகையில் தேச பக்தர்கள் இறை பக்தர்களைப் போல மகாமகக் குளத்துறையில் ஒன்றுகூடி சுதந்திரப் போராட்ட உத்திகளைத் திட்டமிட்டுள்ளனர். இப்படித்துறையில் உள்ள மண்டபங்களில் கல்லூரி மாண வர்கள் இலக்கிய, அரசியல் விமர்சனக் கூட்டங்களை நடத்தி சமூக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.
தெற்கு கரையின் அகலமான சாலைகளில் நகரத்தின் நிலச்சுவான் தார்கள் நெல் உலர்த்தி அரவைக்கு அனுப்பி, அரிசியாக்கும் அறுவடைக்குப் பிந்தைய வேலைகளும் இங்கு நடந்து வருகின்றன. மகாமகக் குளத்தின் நான்கு புற கரைகளிலும் கிரிவலம் வருவது போல மக்கள் நாள்தோறும் ‘குளவலம்’ வந்து இயற்கையான காற்றைச் சுவாசித்து உடல் ஆரோக்கியம் பெற்று வருகின்றனர்.
மகாமகக் குளம் புனித நீராடும் சமய விழாக் கோலம் பூண்டிருந்த போதிலும், குடந்தை நகர மக்கள் வாழ்வின் உயர் வுக்கும் தளமாக இருந்து வருகிறது.
தொடர்புக்கு: sathiyamurthy2000@gmail.com
உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு
கும்பகோணத்தில் பல மொழிகள் பேசும் மக்கள் சகோதர நேயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தமிழ், சௌராஷ்டிரா, உருது, தெலுங்கு, கன்னடம், மராத்தி, ராஜஸ்தான், குஜராத்தி ஆகிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டு வாழும் மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அன்றைய வெள்ளைய அரசின் அதிகாரிகளை எள்ளி நகையாடுவதற்காக சில தந்திரமான உத்திகளைக் கையாண்டுள்ளனர். அதனால் ‘கும்பகோணம்’ என்ற சொல்லுக்கு ‘ஏமாற்றுதல்’ என்ற அர்த்தம் 19-ம் நூற்றாண்டின் ஆங்கில அகராதிகளில் இடம்பெற்றன. பல ஆண்டுகள் கழித்தும் ‘கும்பகோணம் வேலை’ என்று சொன்னால் மோசடி அல்லது ஏமாற்று வேலை எனப் பொருள் தரும் சொற்றொடர்களாகப் பேச்சு வழக்கில் இருந்துவந்துள்ளது.
ஒருமுறை உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஓர் ஊழலைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பெரிய கும்பகோணத்து வேலை நடந்துள்ளது’ என கட்டுரைகளில் எழுதியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பின. கும்பகோணத்திலிருந்து பல கண்டனக் கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. இதற்காக தனது மன வருத்தத்தைத் தெரிவித்து, அந்த மோசடியைக் குறிப்பிட பயன்படுத்திய ‘கும்பகோணம்’ என்ற சொல்லை நீக்குவதாக தெரிவித்துள்ளார். கும்பகோணம் என்ற சொல்லுக்கு மோசடி, ஏமாற்று வேலை, நய வஞ்சகம் என்று பொருள் கொள்ளுமாறு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதிகளிலும் அச்சொற்றொடர் பின்னால் நீக்கப்பட்டுவிட்டது. உண்மையிலேயே கும்பகோணத்தில் பெரிய மோசடிகளோ, ஏமாற்று வேலைகளோ நடந்ததாக குறிப்புகள் எவையும் வரலாற்றில் பதிவாகவில்லை.