

தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் இன்று (செப். 19) மேம்படுத்தப்பட்ட கிளை நூலகத்தைத் திறந்துவைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் மூலம் கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்காத பட்சத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம்.
உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக முறையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பதவிகளை ஏலம் விடுவதாக கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.