Last Updated : 19 Sep, 2021 03:27 PM

 

Published : 19 Sep 2021 03:27 PM
Last Updated : 19 Sep 2021 03:27 PM

புதுவையில் 90 ஓவர் கிரிக்கெட் போட்டி: வரும் 22-ல் முன்னாள் கேப்டன் அசாருதீன் தொடங்கி வைக்கிறார்

அசாருதீன்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் 90 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை வரும் 22-ல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தொடங்கி வைக்கிறார். அதேபோல், புதுச்சேரியில் 30 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் பயிற்சி தரவுள்ளார்.

கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி (சிஏபி) செயலாளர் சந்திரன் கூறுகையில், "சிஏபி சார்பில் முதல் 2 நாள் 90 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. இதில், சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என 4 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வரும் 22-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 முறை போட்டியிடும். அனைத்துப் போட்டிகளும் சீகேம் மைதானத்தில் நடைபெறும். உள்ளூர் அணியை மேம்படுத்த ஒரு அணியில் 3 சிறப்பு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அசாருதீன் வரும் 22-ம் தேதி போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் 30 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து பயிற்சி தரும் முகாமும் 22-ம் தேதி தொடங்குகிறது" என்று தெரிவித்தார்.

இதுபற்றி, மேலும் விசாரித்தபோது, "புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் திசாந்த் யாக்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து சிறப்புப் பயிற்சி தர திட்டமிட்டோம். அதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் பொறுப்பேற்கிறார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள ஷான் டைட் தற்போது புதுச்சேரி அணிக்குப் பந்து வீச்சுக்குப் பயிற்சி தருவார். முக்கியமாக உள்ளூர் போட்டிகளுக்கான முதல் வெளிநாட்டுப் பயிற்சியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

ஷான் டைட் ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று டெஸ்ட், 35 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x