Published : 19 Sep 2021 02:23 PM
Last Updated : 19 Sep 2021 02:23 PM

சென்னையில் கரோனா மெகா தடுப்பூசி முகாம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அன்று ஒரே தினத்தில் சுமார் 25 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (17-ம் தேதி) தமிழகத்தில் இரண்டாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளைப் பெறும் பணி நடைபெற்றதாலும் அந்த முகாம் இன்று (19-ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன. முன்பு போலவே காலை 7 மணிக்குத் தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல்லில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்துப் பொதுமக்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் 26.8.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

12.9.2021 அன்று தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 21,48,526 முதல் தவணை தடுப்பூசிகள், 7,42,495 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 28,91,021 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1,600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்துக் கேட்டறிந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x