

அரியலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா கரோனா தடுப்பூசி முகாமில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பிரிட்ஜ், வாசிங்மெசின், செல்போன், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 2-வது மெகா முகாம் இன்று (செப். 19) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாவட்டத்தில் 200 இடங்களில் 19,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரியலூரில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், ஆர்.சி.நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளி, ஆர்.சி.தெரசா தொடக்கப்பள்ளிகளில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு 6 வகையான மளிகைப் பொருட்களும், கூப்பனும் வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை பூர்த்தி செய்து அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றால், மாலையில் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதில் முதல் பரிசு பிரிட்ஜ் ஒரு நபருக்கும், இரண்டாம் பரிசு வாசிங்மிசின் ஒரு நபருக்கும், 3-ம் பரிசு இன்டெக்சன் ஸ்டவ் 3 பேருக்கும், 4-வது பரிசு செல்போன் 4 நபர்களுக்கும், ஆறுதல் பரிசுகள் 91 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம், லயன்ஸ் கிளப் சங்கங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
அதேபோல், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், முதல் பரிசாக 1 நபருக்கு மிக்சி, 2-ம் பரிசாக ஒரு நபருக்கு சமுத்திகா பட்டுப்புடவை, 3-ம் பரிசாக 10 பேருக்கு செல்போன்களும், 4-ம் பரிசாக 15 பேருக்கு பூனம் புடவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் காரணமாக 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் பலரும் ஆர்வத்துடன் முகாமுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முகவரி கொண்ட நபர்களுக்கு மட்டுமே இந்த பரிசு குலுக்கல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.