

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய கிளை அலுவலகத்தை சோம்நாத் பாரதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் எங்கள் கட்சி ஊழலற்ற அரசியலை செய்து வருகிறது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். புதுச்சேரியிலும் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம்.
இலவசம் என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவது பதவிக்காக அல்ல. நேர்மையான ஆட்சியை அமைக்கத்தான். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆத் ஆத்மி கட்சி போட்டியிடும்’’ என்றார்.