Published : 19 Sep 2021 03:12 AM
Last Updated : 19 Sep 2021 03:12 AM

சென்னை மாநகராட்சி பதிவேடு, கல்வெட்டுகளின்படி மகாகவி பாரதி நினைவு தினமாக செப்.12-ம் தேதியை ஏற்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாரதி பற்றாளர்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேடு மற்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 12-ம்தேதி மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும். அந்த நாளிலேயே ‘மகாகவி நாள்’ கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி பற்றாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி என பன்முகங்களைக் கொண்டஅவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் 1921-ம்ஆண்டு செப்.12-ம் தேதி காலமானதாக பாரதியார் வாழ்க்கை குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு அறிவிப்பு

ஆனால், தமிழக அரசு இதுநாள்வரை பாரதியார் நினைவு தினத்தைஆண்டுதோறும் செப். 11-ம் தேதியே அனுசரித்து வருகிறது. ‘பாரதியார் நினைவு தின நூற்றாண்டை முன்னிட்டு, பாரதியின் நினைவு நாளானசெப்.11-ம் தேதி அரசு சார்பில் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும்’ என்றே தற்போதும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாரதியார் காலமானது செப்.11-ம் தேதியா, 12-ம் தேதியா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாரதியார் ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், கடந்த 1957-ம் ஆண்டுஎழுதி வெளியிட்டுள்ள ‘சித்திர பாரதி’ நூலில், பாரதியார் காலமானபோது இருந்த சூழல்கள் குறித்துஎழுதியுள்ளார். அதில் கூறப்பட் டுள்ளதாவது:

பாரதியார் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு, பின்னர் ரத்தப்போக்கால் அவதிப்பட்டுள்ளார். செப்.11-ம் தேதி இறக்கும் தருவாயில், ஆப்கானிஸ்தான் மன்னராக இருந்த அமானுல்லா கான் குறித்த கட்டுரையை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு எழுத வேண்டும் என, உடன் இருந்த நண்பர்களுடன் பேசியுள்ளார்.

செப்.12 அதிகாலை 2 மணி

அப்போது, பிரபல மருத்துவர் சிகிச்சை அளிக்க வந்தும், அதைஏற்க மறுத்துள்ளார். அதன் பின்னர்தொடர் மயக்கத்திலேயே இருந்துள்ளார். நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்டோர் பாரதியின் வீட்டில் இரவில் கவலையுடன் விழித்திருந்தனர். செப்.12 அதிகாலை 2 மணி அளவில் பாரதி மரணத்தை தழுவினார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பாரதியார் வாழ்ந்த எட்டயபுரம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் அவர் செப்.12-ம் தேதிகாலமானதாகவே பதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இறப்பு பதிவேட்டிலும் அவர் செப்.12-ம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாரதியார் நினைவு நாளாக செப்.12-ம் தேதியையே அரசு ஏற்க வேண்டும். ஆண்டுதோறும் பாரதி நினைவு நாள் ‘மகாகவி நாள்’ கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதையும் செப்.12-ம் தேதியே கடைபிடிக்க வேண்டும் என்றுபாரதியார் மீது பற்று கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தி, மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாரதியார் மறைந்த தேதி தொடர்பாக பரிசீலித்து தீர்வு காணப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x