

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துவழங்குகிறது.
கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில்தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிக அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்று ஒரே நாளில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அக்.31-ம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒரு முறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் இன்று (செப்.19) கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி, 17 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. குறைந்தது 15 லட்சம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இந்த முகாம் 17-ம் தேதி (நேற்று முன்தினம்) நடப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளை பெறும் பணி நடப்பதாலும் முகாம் 19-ம் தேதிக்கு (இன்று) மாற்றப்படுவதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 17-ம் தேதி, நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.