

தமிழக அரசின் பொதுத் துறையில் பயன்படுத்தப்படும் கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள், முக்கிய தகவல்களை திருடியுள்ளனர். அதை சரிசெய்ய 1,950 அமெரிக்க டாலர்கள் கேட்டும் மிரட்டியுள்ளனர்.
தமிழக அரசின் பொதுத் துறைதொடர்பான தரவுகள், தகவல்களை சேமித்துவைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் தனிஅலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் உள்ள கணினிகளை கடந்த 17-ம் தேதி ‘ஹேக்கர்கள்’ முடக்கியுள்ளனர்.
முக்கிய தகவல்கள் திருட்டு
தமிழகத்துக்கு வந்து சென்றமுக்கிய நபர்களின் விவரங்கள், வர உள்ள முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அவர்கள் திருடியுள்ளனர்.
கணினிகளை மீண்டும் செயல்பட வைக்க 1,950 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.50 லட்சம்)கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இந்த தொகையை கிரிப்டோ கரன்சியாக கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மின்னணு நிறுவனமான ‘எல்காட்’ அதிகாரிகள், கணினி மேம்பாட்டு மைய அதிகாரிகள், இணையபாதுகாப்பு நிபுணர்கள் ‘ஹேக்’ செய்யப்பட்ட கணினிகளை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் பொதுத் துறை தகவல்கள் சேமிப்புக்காக 12 டெஸ்க்டாப் கணினிகள் உள்ளன. அதில் 7 கணினிகள் ‘விண்டோஸ் 7’ என்கிற மென்பொருளில் இயங்குபவை.
இதனால், அவற்றில் தகவல் திருட்டை தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் கிடையாது.
எனவே, ஹேக்கர்கள் இந்த கணினிகளில் இருந்து மிகஎளிதாக தகவல்களை திருடியுள்ளனர் என ஆய்வில் தெரியவந்தது. மென்பொருள் பாதுகாப்பு வசதிகள் இல்லாததே தகவல் திருட்டுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம்போலீஸார் ஈடுபட்டனர்.
‘முக்கிய பிரமுகர்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டுள்ளதால், அவர்களது பாதுகாப்பு மற்றும் வருகை தேதியில் மாற்றம்செய்யப்படும். மற்றபடி, பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது’ என்று சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘காலாவதி மென்பொருளை பயன்படுத்துவது மிகவும் அபாயகரமானது. அதுவும் அரசு நிறுவனங்கள் கனிணி பயன்பாட்டு விஷயத்தில் நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்ற தகவல் திருட்டுகளில் இருந்து தப்பிக்க முடியும்’ என்று மென்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.