Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

551 யூனிட் மணல் பதுக்கிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கேட்க நடவடிக்கை

வேலூர்

வீட்டில் பதுக்கி வைத்துள்ள மணலுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய தொழில் கூட்டாளிகள், ஆதரவாளர்கள் வீடுகள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி சாலையில் உள்ள வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 275 யூனிட் அளவுக்கு மணல் பதுக்கி வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்பேரில், வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னார்டு கடந்த 16-ம் தேதி இரவு 11 மணியளவில் ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள மணல் இருப்பு குறித்த அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் அவர் அறிக்கையாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘முன்னாள் அமைச்சரின் வீட்டில் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருப்பதாக கனிமவள அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். இவ்வளவு மணல் எங்கிருந்து வாங்கப்பட்டது? அதற்கான ரசீது இருக்கிறதா என்றும் அப்படி ரசீதுகள் இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஆவணங்களை அவர் சமர்ப்பிக்காவிட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x