Published : 20 Jun 2014 09:30 AM
Last Updated : 20 Jun 2014 09:30 AM

ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள் - முன்னோடிகளாக திகழும் பழங்குடிகள்

“ஒருகாலத்தில் நாங்கள் அடிமை கள்; இன்றோ சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் விவசாயிகள். எல்லாம் பெரியாறு புலிகள் சரணாலயம் தந்த வாழ்க்கை” என்கின்றனர் புலிகள் சரணாலயம் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. புலிகள் சரணாலயத்தில் மன்னான், பளியன், ஊரளி, உல்லாடன், மலம்பண்டாரம், மலராயன் ஆகிய சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 1.25 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் கணிசமானோர் தங்கள் பிரத்யேக மொழியுடன் தமிழையும் பேசுகின்றனர்.

இடைத்தரகர்கள் பிடியில் அடிமை வாழ்க்கை!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் நிலைமை அடிமைகளை போல இருந்தது. இதுகுறித்து மன்னான் குடி கிராமத்தின் தலைவரான டி.ராஜிதேவன் கூறுகையில், “ஆரம்பத் தில் நாங்கள் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், தேன் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகிய பாரம்பரியத் தொழில் களை செய்தோம். கூடவே, மிளகு, ஏலம் பயிரிட்டோம். ஆனால், அவற்றின் மதிப்பே எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பணக்காரர்கள் (இடைத் தரகர்கள்) வருவார்கள். ஒரு ஏக்கர் பரப்பளவு மிளகு விளைச்சலுக்கு 500 ரூபாய் கொடுப்பார்கள்.

எங்களில் பலர் அவர்களிடம் 15,000 ரூபாய் வரை முன் பணம் வாங்கியிருந்தோம். அதற்கு மாதம் தோறும் வட்டி கணக்கிடுவார்கள். ஒவ்வொரு முறை மிளகு, ஏலம் கொள்முதல் செய்யும்போது அந்த வட்டியில் இருந்தே பொருட்களுக்கான விலையை கழித்துக்கொண்டு சொற்ப பணத்தைத் தருவார்கள். பல ஆண்டுகள் கழிந்தாலும் வாங்கிய முன்பணம் மட்டும் அப்படியே இருக்கும். திடீரென்று, ‘முன்பணத்தை திருப்பிக்கொடு’ என்பார்கள். பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும்போது எங்கள் பிள்ளைகளை அவர்கள் வீட்டு வேலைக்கும் செங்கல் சூளைக்கும் கொத்தடிமைகளாக இழுத்துச் சென்றார்கள்.

வாழ்க்கையை மீட்டுத் தந்த புலிகள் காப்பகம்!

இதற்கிடையே வேட்டையாடுவது, மரம் வெட்டுவது தொடர்பாக வனத்துறையினருக்கும் எங்களுக்கும் அடிக்கடி பிரச்சினை வரும். ஒருமுறை வனத்துறையினர் எங்களிடம் வந்து, ‘வேட்டையாடக் கூடாது. புலிகளை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது’ என்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான் எங்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் சொன்னோம். அதிர்ந்துபோன அதிகாரிகள், எங்கள் மிளகு, ஏலக்காயின் உண்மையான விலையைச் சொன்னார்கள். நாங்கள் ஆயிரம் ரூபாய் மிளகை 50 ரூபாய்க்கு விற்று ஏமாந்து கொண்டிருந்தது அப்போதுதான் புரிந்தது.

வனத்துறையே முன் பணம் கொடுத்தவர்களை அழைத்துப் பேசி கடன்களை அடைத்தது. தொடர்ந்து வனத்துறையினர் எங்களிடம் காடை, குருவியைக் கூட வேட்டையாடக் கூடாது. புலிகளை கொல்லக் கூடாது. குறிப்பிட்ட எல்லைக்குள்தான் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். தேக்கடி ஏரியில் மீன் இனப்பெருக்க காலமான ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை மீன் பிடிக்கக் கூடாது என்று நிபந்தனைகள் விதித்தார்கள்.

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு!

கூடவே தேசிய புலிகள் ஆணையம் மற்றும் மாநில வனத்துறை சார்பில் வங்கிகளில் கடன் பெற்றுத் தந்து பயிர் சாகுபடிக்கு உதவினர். எங்கள் கிராமங்களில் பள்ளிகள் அமைத்துக்கொடுத்தனர். எங்கள் குழந்தைகள் முதல் முறையாக படிக்கச் சென்றார்கள்.

இப்போது எங்கள் சமூகத்தினர் பலர் இதே சரணாலயத்தில் வாட்சர்களாகவும், வனத்துறையின் சுற்றுலா கைடுகளாகவும் இருக்கின்றனர்.

தேசிய புலிகள் ஆணையம் ஒரு புதிய திட்டமாக எங்கள் ஆறு சமூகத்தினரின் கிராமங்களில் ஒன்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்களை (Eco development committy) ஏற்படுத்தியது. ஒவ்வொரு குழுவின் கட்டுப்பாட்டிலும் 100 முதல் 150 குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பத்து பேர் இருக்கிறோம். இதில் சரிசமமாக ஐந்து பேர் பெண்கள் என்பது கட்டாயம்.

இயற்கை விவசாயம் மட்டுமே!

மிளகு, காப்பி, ஏலக்காய் இவற்றுடன் காய்கறிகளும் பயிரிடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு நிலத்தில்தான் பயிரிட வேண்டும். செயற்கை உரம் போடக் கூடாது. இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்பவை கட்டாய விதிமுறைகள்!

சேமிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய்!

இவை தவிர மிளகு சாகுபடி குழு, மீன் பிடிப்போர் குழு, தேன் சேகரிப்போர் குழு, வட்டியில்லா சிறு கடன்கள் குழு ஆகிய துணைக் குழுக்கள் உண்டு. கடந்த 2013-ம் ஆண்டு மட்டும் தேன் சேகரிப்போர் குழு 2700 கிலோ தேன் சேகரித்துள்ளது. 6000 கிலோ மிளகு சாகுபடி செய்துள்ளோம். மீன் பிடித்தல் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறோம். மொத்தப் பணத்தையும் நிதிக் குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

பொருட்களை விற்பனை செய்ய பெரியார் புலிகள் சரணாலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஒருகாலத்தில் கடனாளிகளாகவும், அடிமைகளாகவும் இருந்தோம். ஆனால், இன்று எங்கள் ஒவ்வொரு குழுவினரிடமும் சேமிப்பு மட்டுமே சராசரியாக 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கின்றது.” என்றார் பெருமிதத்துடன்!

“யானைக்கு போக மிச்சமே எங்களுக்கு”

பணம் வந்தாலும் பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் துறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மிக எளிமையான குடில்களிலேயே வசிக்கின்றனர். ஒவ்வொருவரின் வீட்டுத் தோட்டத்திலும் பலா, வாழை, மூங்கில் மரங்கள் இருக்கின்றன. யானையை ‘சாமி’ என்று அழைக்கும் இவர்கள் தினசரி யானை வந்து சாப்பிட்டுப்போன மிச்சமே தங்களுக்கானது என்கின்றனர். இங்கு யானைகள் யாரையும் தாக்கியது இல்லை. குழுக்களின் நிதியை பெண்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பது கண்டிப்பான விதிமுறை. ஆண்கள் மது குடித்து பணத்தை செலவு செய்துவிடுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

வனவாசிகளாக திரியும் மலம்பண்டாரம் மக்கள்!

மேற்கண்ட பழங்குடி மக்களில் மலம்பண்டாரம் சமூகத்தினருக்கு சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் இல்லை. இவர்கள் அடர்ந்த காடுகளில் வனவாசிகளாகவே திரிகின்றனர். குகைகள், மரப் பொந்துகள், தற்கால குடில்களே இவர்களின் தங்குமிடம். பயந்த சுபாவம் கொண்ட இவர்கள் வெளி பழங்குடியின சமூகத்தினர் தங்களைப் பார்ப்பதைக்கூட விரும்புவது இல்லை. வனத்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை விடுத்து வெளியே வர விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x