

எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதங்களுக்கு நிறுத்திவைத்து தேசியபசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுஉள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆர்.எல்.சீனிவாசன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எர்ணாவூர் பகுதியில் 450 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையம் இயங்கி வந்தது. 40 ஆண்டுகளாக இயங்கி வந்த அனல் மின் நிலையம், கடந்த 2017-ல் மூடப்பட்டது.
இந்த அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக, அதே இடத்தில் கூடுதலாக 2 அனல் மின் நிலையஅலகுகளை அமைக்க தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ)திட்டமிட்டது. அதனடிப்படையில், 600 மெகா வாட் உற்பத்தித் திறன்கொண்ட எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க அலகுக்கு, கடந்த 2009-ல் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் 10 ஆண்டுகால அனுமதி வழங்கியது.
இந்த அனுமதி 2019-ல் காலாவதியாகும் நிலையில் இருந்தது. 2018 நிலவரப்படி அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி ரூ.703 கோடி செலவில், 17 சதவீதம் மட்டுமே முடிவடைந்திருந்தது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதியை மேலும்4 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிடுமாறு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 2018-ல் டான்ஜெட்கோ கடிதம் எழுதி இருந்தது.
இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்காமல், 2019 டிசம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டித்து வழங்கியுள்ளது.
இவ்வாறு, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது, 2006-ல் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிரானது. எனவே, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என்று மனுதாரர் கூறுவதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி 6 மாதங்களுக்குநிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், 2 மாதங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளைப் பெற்று,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
அதேபோல, இதர சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை டான்ஜெட்கோ ஆய்வுசெய்து, அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றையெல்லாம் பரிசீலித்து, உரிய கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.