

பிரதமர் மோடியின் புகைப்படக் கண்காட்சியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி, தமிழக பாஜக ஓபிசி பிரிவு சார்பில் சென்னை தாசபிரகாஷ் பகுதியில் நேற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியை மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் இளம் வயது வாழ்க்கை, அரசியல் பிரவேசம், சாதனைகள் மற்றும் மக்கள் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, "இந்தியாவில் 70 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை, வெறும் 7 ஆண்டுகளிலேயே பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அரசியல் பயணத்தில் 20 ஆண்டுகளைக் கடந்து சாதித்து வரும் அவரது பிறந்த நாளை, தொடர்ந்து 20 நாட்கள் கொண்டாட தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது" என்றார்.
பின்னர், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சிறப்பு மலரைவெளியிட, நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பாஜக சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 700 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கினார். இதேபோல, பட்டினம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற எழுவர் கால்பந்துப் போட்டியை அவர் தொடங்கிவைத்தார்.