Published : 18 Feb 2016 08:10 AM
Last Updated : 18 Feb 2016 08:10 AM

சேலம் உட்பட 8 மாவட்டங்களில் கொள்முதல் நிறுத்தத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

இந்திய ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள் நிறுத்தியதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) கிடங்கில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஐஓசி நிர்வாகம் லாரி உரிமையாளர்கள் சங்கங்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்குகளுக்கு அதிகளவில் ஊக்க தொகை வழங்குவதால், அந்த பெட்ரோல் பங்க்குகளில் டீசல் லிட்டருக்கு ரூ.2.11 வரை விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பிற பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை குறைவதோடு, விலை குறைப்பு குறித்து வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலையுள்ளது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்து ஐஓசியிடம் இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தினர்.

இதனால், நேற்று முன்தினம் இரவு வரை பெட்ரோல் பங்க்குகளில் இருப்பு இருந்த வரை பெட்ரோல் விற்பனை நடந்தது. நேற்று காலை முதல் சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 750 பெட்ரோல் பங்க்குளில் இருப்பு தீர்ந்ததால் மூடப்பட்டன.

சேலம் நகரில் இருப்பு உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகள் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவன (பீபிசிஎல்) டீலர்களின் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் நிரப்ப ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான பேர் பெட்ரோல் நிரப்ப திரண்டதால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பெட்ரோல் நிரப்பும் நிலை ஏற்பட்டது.

இதே போல் டீசலும் பெரும்பாலான பங்க்குகளில் இருப்பு குறைந்ததால், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று டீசல் நிரப்பினர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு சேலம் ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தலைமையில், நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று (18-ம் தேதி) சென்னையில் அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x