

அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் உற்பத்தியை பெருக் கவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவேதான், நெல் மற்றும் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட அதிக விலை தமிழக அரசால் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில், சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ. 1,410 உடன், தமிழக அரசு சார்பில் கூடுதலாக ரூ.50 வழங்கப்படுகிறது. அது போல் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.70 வழங்கப்படுகிறது. அதன்படி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல், சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,460-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,520-ம் வழங்கப்படுகிறது.
பரவலாக்கப்பட்ட நெல் கொள் முதல் திட்டத்தின் கீழ் விவசாயி களிடம் இருந்து தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. காவிரி பாசனப் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், பிற மாவட் டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காவிரி பாசன டெல்டா பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 1,292 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதுவரை இவற்றில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 870 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படும்.
டெல்டா அல்லாத பிற மாவட்டங் களில் நடப்பு பருவத்தில் இந்த ஆண்டு 28.34 லட்சம் ஏக்கர் பரப் பில் நெல் சாகுபடி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 61 நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் நேரடி கொள் முதல் நிலையங்கள் மேலும் திறக்கப் பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சி யர்கள் உத்தரவுப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற் றும் கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கும். இதன் காரணமாக விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தியாகும் நெல்லை அரசு நிர்ணயித்த விலை யில், விற்க இயலும். இவ்வாறு முதல் வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.