Published : 18 Sep 2021 09:23 PM
Last Updated : 18 Sep 2021 09:23 PM

சிலம்ப விளையாட்டை அங்கீகரித்த மத்திய அரசுக்கு தமிழக இளைஞர் நலன் துறை அமைச்சர் நன்றி

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் விளையாட்டை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்துள்ளதற்கு தமிழக இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி கோரப்பட்டது.

அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து "புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது.

ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x