

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டு மங்கை என்பவர் தேர்வு செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, ஆட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, ஆதிதிராவிடர் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கிய பொன்னங்குப்பம் ஊராட்சியில் 3,900 வாக்குகள் உள்ளன. இதில் துத்திப்பட்டு கிராம வாக்குகளே அதிகம்.
இந்த நிலையில் பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பதவி அளிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதவிக்கு நேற்று இரவு ஏலம் நடைபெற்றதாகவும், அதில் மங்கை என்பவர் ரூ.13 லட்சத்துக்குத் தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளதாகவும் துத்திப்பட்டு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதவிர மேலும் இரு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவியும் ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் துத்திப்பட்டு கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியர் மோகன் இன்று பொன்னங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் கிராம மக்களிடையே உரையாற்றி, அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மக்களாட்சியின் தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் அத்தகைய நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகள் இவ்வாறு ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கின்ற செயல் என்பதால், ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்திட மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.