Published : 18 Sep 2021 12:16 PM
Last Updated : 18 Sep 2021 12:16 PM

தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது; விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது எனவும், விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவேன் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார்.

இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'வணக்கம்' எனத் தமிழில் கூறி செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:

"மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்குப் பெருமைப்படுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்பச் செயல்படுவேன்.

அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பைச் சிறப்பாகச் செய்வேன். என்னால் இயன்ற அளவு தமிழக மக்களுக்கு சேவையாற்றுவேன். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்தச் செயல்பாடு குறித்துக் கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை".

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x