

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடை பெறவுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி நிறைவு பெறவுள்ளது. அதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் பாஜக போட்டியிடும் மாவட்ட ஊராட்சிக் குழுஉறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வார்டுகளை முடிவு செய்வது குறித்து பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் பேசியுள்ளனர்.
ஓரிரு நாளில் முடிவு
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வார்டுகள் ஒதுக்கீடு குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 9 மாவட்ட அதிமுக – பாஜக நிர்வாகிகளுடன் பேசி ஓரிரு நாளில் முடிவு எட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.