

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலி்ன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார்.
இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கும் ஆர்.என்.ரவி, பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு, 1976-ல் இந்திய காவல் பணியில் சேர்ந்து கேரள மாநில பிரிவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய பதவிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வுப் பிரிவில்பணியாற்றும்போது, கனிமவள மாபியாக்கள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
மத்திய உளவுத்துறையில் பணியாற்றியபோது, ஜம்மு-காஷ்மீர் மற்றும்வடகிழக்கு பகுதிகளில் நடந்த வன்முறைகளுக்கு எதிராக முக்கிய பணிகளை ஆற்றினார். தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றவர். இனக்கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். 2012-ல் அரசுப் பணியில் இருந்துஓய்வுபெற்றார். பிரதமர் அலுவலகத்தில் இணை புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018-ல் தேசியபாதுகாப்பு துணை ஆலோசகரானார்.
நாகலாந்து ஆளுநராக கடந்த 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி பதவியேற்ற ஆர்.என்.ரவி, கடந்த 15-ம் தேதி வரை அங்கு பணியாற்றினார். தற்போது, தமிழக ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார்.