

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்இதர 28 மாவட்டங்களில் காலியாகஉள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த செப்.13-ம்தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் கடந்த 15-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளிடங்கள் ஏலம் விடப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசியலமைப்புச் சட்டத்துக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் புறம்பாக நடக்கும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி தண்டனைக்கு உரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவதுமக்கள் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல். ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை என்பதை மக்கள்உணரச் செய்ய உரிய நடவடிக்கைஎடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிகிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ரந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலமே நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.