

தேமுதிக மாநாடு தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் திருப்பத்திற்குக் கட்டியம் கூறும் மாநாடாக அமையட்டும் என மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில், "2016 பிப்ரவரி 20 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அரசியல் திருப்புமுனை மாநாட்டு அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம். அழைப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த மாநாடு நடைபெறுகிறது.
அண்ணா மறைவுக்குப் பின், தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் தமிழக மக்கள் உள்ளனர். இதனைத் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்கள் நன்றாக அறிவார்.
இந்தப் பின்னணியில் நடைபெறுகின்ற தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு, தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் திருப்பத்திற்குக் கட்டியம் கூறும் மாநாடாக வெற்றி பெற, மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றோம்" எனத் தெரிவித்துள்ளனர்.