

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க இயலாத சூழலில், எழுத்துப்பூர்வமான உரையைசமர்ப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி செலுத்துவோர், குறிப்பாக சிறு வணிகர்கள், ஜிஎஸ்டிஎன் போர்ட்டலில் அனைத்து தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், கணக்கு சமர்ப்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.
தமிழகம் வர்த்தகத்துக்கு உகந்தமாநிலமாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான வசதியை செய்து தரவேண்டிய கடமை இருக்கிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 4 ஆண்டுகளில், தமிழில்இந்த சேவைவை வழங்க எந்தமுயற்சியும் எடுக்கப்படவில்லை.சட்டப்பேரவையில் எங்கள் அரசாங்கம், ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை தமிழில் தருவதாக உறுதிஅளித்துள்ளது. எனவே, ஜிஎஸ்டிஎன் போர்ட்டலில், தமிழில் சேவை வழங்குவதை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி செலவு மற்றும் பயன்களை மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மறு ஆய்வு செய்யஇதுவே உகந்த நேரமாகும். மேலும், நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அடிப்படை மாற்றம் செய்வதற்கான நேரமும் வந்துவிட்டது. எங்கள் பங்காக, தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவை அமைக்கும் முயற்சியில் உள்ளோம். இதன்மூலம், மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி அதிகார பகிர்வை மேம்படுத்த முடியும்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆனபின்னரும் ஜிஎஸ்டி தொடர்பான சட்டத்தில் 100 சதவீதம் தெளிவு கிடைக்கவில்லை. மேலும், மதுபானங்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து அளிக்கும் சேவைக்கு 18 சதவீதம் வரி விதிக்கும் முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. இதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதானவரியை விதிப்பது மாநில அரசுகளின் உரிமையாகும். அதேநேரம்மத்திய அரசு பெட்ரோல் மீது 500 சதவீதம் மற்றும் டீசல் 1000 சதவீதம் வரை கடந்த 2014 முதல் வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரியில் மாநில அரசுகளுக்கு ஒரு பைசாகூட கிடைப்பதில்லை. மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.
இந்தச் சூழலில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது என்பது அநீதி இழைப்பதாக உள்ளது. மத்திய அரசு, செஸ் மற்றும் மேல் வரியை முழுமையாக நீக்குமானால், நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், எங்கள் நிலையையும் பரிசீலனை செய்வோம். அதேபோல், தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரி உயர்வையும் கடுமையாக எதிர்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.