

பிரதமர் மோடியின் பிறந்த தினம் (செப்.17) நாட்டுக்கே சமூக நீதி தினம் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, 12 ஆயிரம் பெண்களுக்கு ‘இதம்’ என்ற பெயரில் மாதந்தோறும் இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை வானதி சீனிவாசன் கோவையில் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி பிறந்த நாளை இன்று முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாடுகிறோம். பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மாதந்தோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு வீடுகளுக்கே சென்று நாப்கின் வழங்குதல் மற்றும் 2 ஆயிரம் பெண்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
செப்டம்பர் 17 சமூக நீதி நாள் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது வரவேற்புக்குரியது. பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். பெரியார் உயிரோடு இருந்தால் இதை நிச்சயம்கொண்டாடி இருப்பார். பிற்படுத்தப் பட்டோர், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து இருப்பதுடன், மாநிலங்களே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கலாம் என அனுமதி வழங்கியவர் பிரதமர் மோடி. அவரது பிறந்த தினம் நாட்டுக்கே சமூக நீதி தினம்.
‘நீட்’ தற்கொலைகளுக்கு திமுகதான் காரணம். தேர்வு பயத்தால் உயிரிழக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.