Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

சிறுநீரக கல் வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்: சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் அறிவுறுத்தல்

பி.பி.சிவராமன்

சென்னை

சிறுநீரக கல் வராமல் தடுக்கவும், கல்லை வெளியேற்றவும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கியூரி மருத்துவமனையின் தலைவர் மற்றும் சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் கியூரி மருத்துவமனை இணைந்து பொதுவான சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கை நேற்று நடத்தியது. கியூரி மருத்துவமனையின் தலைவர் மற்றும் சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மருத்துவர்கள் எஸ்.மஞ்சு, கே.ரங்கா, மீனாட்சி சுந்தரம் மற்றும் மாலினி ராபர்ட்ஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் பொதுவான சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சிறுநீரக நிபுணர் பி.பி.சிவராமன் கூறியதாவது:

ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினை, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வருகிறது. சிறுநீரக பாதையில் அடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தப்போக்கு, தொற்று போன்றவை ஏற்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படியே புற்றுநோயாக மாறியிருந்தாலும் உடனே சிகிச்சை அளித்து சரிசெய்துவிட முடியும்.

சிறுநீரக கல் பிரச்சினை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வருகிறது. ஆனாலும் ஆண்கள் இப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிகமாக தண்ணீர் குடிக்காததால் சிறுநீரக கல் ஏற்படுகிறது. சிறுநீரக கல்லை கரைக்க முடியாது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன்மூலம் மணல் மாதிரி இருக்கும் கல் சிறுநீர் கழிக்கும் போது வெளியேறி விடும். சிறுநீரக கல் 7 மிமீ-க்கு மேல் இருந்தால் தானாக வெளியேறாது. அறுவை சிகிச்சை மூலம்தான் கல்லை எடுக்க முடியும்.

சிறுநீரக தொற்றால் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சிறுநீர் வெளியே செல்லாமல் தங்கும்போது, கடுமையான வலி மற்றும் தொற்று ஏற்படுகிறது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்கக் கூடாது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரக பிரச்சினைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உள்ளன. அறுவை சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும். ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு ரோபாட்டிக் சிகிச்சை அளிக்கலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்திவிடலாம்.

துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கியூரி மருத்துவமனையில், செப்டம்பர் 18-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளுக்கான இலவச சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பரிசோதனை செய்யப்படும். மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். முகாமுக்கு வரவுள்ளவர்கள் 9344257901 எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x