அடுத்த 5 ஆண்டுகளில் 75 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை

அடுத்த 5 ஆண்டுகளில் 75 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை
Updated on
1 min read

அடுத்த 5 ஆண்டுகளில் 75 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேலைகள் நடந்து வருகின்றன என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திருப்பூரில் நேற்று கூறினார்.

திருப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஒவ்வொரு இளைஞரும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், அதை முந்திப்பிடியுங்கள். அப்போதுதான் வெற்றியாளனாக வலம் வரமுடியும்.

பூமியில் இருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்கிரகத்துக்கு பல நாடுகள் விண்கலம் அனுப்பின. இந்தியா அனுப்பியது மட்டுமே வெற்றிகரமாக சென்றடைந்தது. நம் நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலை இல்லை என்பதை விட, வேலைக்கு சரியான ஆள் இல்லை என்பது தான் உண்மை. எந்தத்துறையாக இருந்தாலும், அதில் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உறுதுணையாக இருந்தார். எந்தவொரு கண்டுபிடிப்புக்கும், அவர் பாராட்டியது இல்லை. மாறாக அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியைத்தான் கேட்பார். இந்தக் கேள்வியே என்னை அடுத்த கண்டுபிடிப்புக்காக உழைக்கத் தூண்டியது என்றார்.

இதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தற்போது நாட்டில் தொழில்நுட்பத்தின் தேவை அதிகம் இருப்பதால் வருங்காலத்தில் மாதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த வேலைகள் நடந்து வருகின்றன.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மங்கள்யானின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மனதில் உறுதி இருந்தால், எந்தச் செயலையும் சிறப்பாக செய்யலாம். மலை அளவு பேச்சைவிட கடுகளவு செயலே சிறந்தது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in