

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் 1996-ம் ஆண்டு ரூ.1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் தன் தயாரிப்பைத் தொடங்கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. இன்று நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. நஷ்டம் காரணமாக நிறுவனத்தை மூட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் முடிவால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.
ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கரோனா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.