Published : 20 Feb 2016 03:24 PM
Last Updated : 20 Feb 2016 03:24 PM

தேர்தலின்போது விவசாயிகள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

‘யார் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்பதை உணர்ந்து, தேர்தலின்போது விவசாயிகள் தெளிவாக முடிவெடுங்க வேண்டும்’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இணைந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது.

மாநாட்டை தொடங்கி வைத்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘விவசாயத்தை லாபகரமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, வேளாண் தொழிலுக்கும் வழங்க வேண்டும். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்.விவசாய தொழில் என்பது இன்று விரும்பத்தகாத தொழிலாக மாறி வருகிறது. 30 சதவீத பரம்பரை விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி விட்டனர்.1970-ம் ஆண்டு 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த விவசாய நிலம் 2011-ல் 45 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதனை மாற்றும் வகையில் விவசாயிகளுக்கு அரசு நம்பிக்கையை அளிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என்றார்.

மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் எனக்கு தெரியும். ஏற்கெனவே ஆண்டவர்களும், ஆள்பவர்களும்தான் இதற்கு தீர்வு காண வேண்டும். ஆனால், இருவருமே பிரச்சினைகளை தீர்க்காமல் அதிகமாக்கியுள்ளனர். விவசாயிகளின் பிரச்சினை பற்றி ஆட்சியில் இருப்பவர்களுக்கு கவலையில்லை. நாராயணசாமி நாயுடு போன்ற தலைவர்கள் இருந் திருந்தால், அரசியல் தலைவர்கள், விவசாயிகளை கெஞ்சும் நிலை ஏற்பட்டு இருக்கும்’ என்றார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, ‘உங்கள் கோரிக்கைகளை ஆட்சியில் இருக்கிறவர்கள் தீர்க்கவில்லை என்பதை தெரிந்து கொண்டீர்கள். நல்லவை நடக்க வேண்டுமானல் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். நாடு அமைதியில்லாத போக்கிற்கு செல்ல யார் காரணம் என்று உணர வேண்டும். கடன்களை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. யார் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்பதை உணர்ந்து தேர்தலின்போது தெளிவாக முடிவெடுங்கள்’ என்றார்.

மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தேசிய மாதிரி கணக்கெடுப்பு வாரியத்தின் புள்ளிவிபரப்படி, தமி ழகத்தில் 82.5 சதவீதம், ஆந்திராவில் 92.9 சதவீதம், தெலுங்கானாவில் 89.1 சதவீதம் கடனில் மடிகிறார்கள் என்று தெரிவிக்கின்றன. நான் விவசாயியின் பிரதிநிதி. அவர்களது துயரங்களை தகர்க்க சபதம் ஏற்க வந்திருக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாதா?

ஆந்திர அரசு 82 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அரசே தவணை முறையில் தேசிய வங்கி கடன்களை செலுத்தும் என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா அரசு 17 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய குடும்பத்தின் தலையிலும் 1 லட்சத்து 1900 ரூபாய் கடன் சுமை உள்ளது என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தேசிய குற்ற ஆவண புள்ளிவிபரப்படி, 2014-ம் ஆண்டில் மட்டும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்து பிரகடனம் செய்கிறோம். விவசாய விளைபொருளுக்கு கட்டு படியாகும் விலையை பரிந்துரை செய்யும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை ஏற்கும் அரசுகள்தான் இனிமேல் இந்த நாட்டில் பொறுப்புக்கு வர வேண்டும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றும்போது பாண்டியாறு புன்னம்புழா திட்டத் தையும் இணைந்து செயல் படுத்த வேண்டும். அப்போதுதான் பவானிசாகர் அணை பாசன விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார் கள். கெயில் எரிவாயு திட்டம் எந்த வகையில் வந்தாலும் அதற்கு எதிராக போராடும்.

இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து ஈரோடு மாநாட்டு பிரகடனத்தை பி.கே. தெய்வசிகாமணி வாசித்தார். அதில், ‘தேசிய, கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள நிலுவை கடன்களில் ஒரு பைசாவை கூட திருப்பி செலுத்த மாட்டோம். விவசாய கடன்களை ரத்து செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம்’ என அறிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, ‘பலவகையான போராட்டங்கள் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் பாண்டியாறு -புன்னம்புழா திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். இலவச மின்சாரத்திற்காக போராடி உயிரிழந்த விவசாயிகளை, தியாகியாக போற்றி அவர்களது குடும்பத்திற்கு அரசு உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதுடன், தொடர்ந்து விவசாயிகள் வாழ்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’ என்றார்.

மாநாட்டில் துரைமாணிக்கம் (இந்திய கம்யூனிஸ்ட்) சண்முகம் (மார்க்சிஸ்ட்) கொஜக தலைவர் ஜி.கே.நாகராஜ், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் தெய்வசிகாமணி, காசியண்ணன், செல்லமுத்து, என்.எஸ்.பழனிசாமி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x