

மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்ட குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளை அடிப்படை வசதியற்ற இடத்தில் அடைத்து வைத்ததே இதற்கு காரணமாகும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்; மாத உதவித்தொகையை ரூ.5000 ஆக அதிகரிக்க வேண்டும்; 40 விழுக்காடு குறைபாடு உடையவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவிக்க வேண்டும் ஆகியவை தான் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவையாகும்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு தயங்குகிறது. இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்திய போதும் அவர்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
பின்னர் அவர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இடம் பெறாததால் தான் அவர்கள் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அவர்கள் முன்வைப்பதற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மக்கள் நல அரசின் அடையாளமாக இருக்கும். ஆனால், கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்த பிறகும் அவற்றை அரசு கனிவுடன் ஆய்வு செய்யாமல், கவுரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற மறுப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்த அவர்கள் முயன்றால் அதை அரசு அனுமதித்திருக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் மாற்றுத்திறனாளிகள் கூடும் இடங்களில் எல்லாம் காவலர்களை குவித்து, ஏதோ தீவிரவாதிகளை கைது செய்வதைப் போல கைது செய்திருக்கிறது அரசு.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யாமல், தனித்தனி இடங்களில் அடைத்து வைத்து மிரட்டிய பின், இரவில் எழும்பூர் இராஜரத்தினம் திடலில் காவல்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். காவல்துறையினர் தாக்குதல், மிரட்டல் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளால் தான் 70 வயது முதியவரான குப்புசாமி ரத்த வாந்தி எடுத்து இறந்திருக்கிறார். கனிவும், கருணையும் காட்டப்பட வேண்டியவர்களிடம் அரசு கடுமை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ள போதிலும் அதை மதிக்காமல் அவர்களை அரசும், காவல்துறையும் எதிரிகளாகவே பார்க்கும் கொடுமை தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத்திறனாளிகளை கிழக்கு கடற்கரை சாலை சுடுகாடு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக்கிவிட்டது போன்ற அணுகுமுறையைத் தான் தமிழக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இது தவறு. மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், வணிகவரித் துறையினர், செவிலியர்கள் உட்பட போராட்டம் நடத்தி வரும் அனைத்துப் பிரிவினரையும் அரசு அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை போராட்டத்தில் உயிரிழந்த குப்புசாமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.