

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் தியாகிகளின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.5 கோடியே 34 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கல்வி, நிர்வாகம், ஆய்வறிஞர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ‘தமிழ்நாடு’ என்ற வடிவில், 5 கட்டிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ‘மி’ வடிவில் அறிவியல் துறை கட்டிடம் ரூ.3.21 கோடியில் கட்டப் பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மொத்தம் ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
மேலும் சீன, அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள், அவ்வையின் ஆத்தி சூடி நூல்களையும் வெளியிட்டார். நூல்களை அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதுதவிர, தமிழக அரசின் சார்பில் குமரி மாவட்டம் களியக்கா விளையில் மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன், சுசீந்திரத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திருச்சி மாவட்டம் கம்பரசம் பேட்டையில் மொழிப்போர் தியாகி கீழ்ப்பளுவூர் சின்னச்சாமி, ராமநாத புரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் மார்பளவு சிலை, பொன்விழா முகப்பு வளைவு, மாணவர் விடுதி, சேலத்தில் அரசுப் பொருட்காட்சி கிடங்கு ஆகியவை ரூ.3 கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் ரூ.9 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்கு, ரூ.12 லட்சத்தில் நவீன பயணியர் நிழற்குடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் த.உதய சந்திரன், செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.