இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்

இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்
Updated on
1 min read

சென்னையில் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்களின் 10 முக்கிய அம்சங்கள்:

* ‘108’ அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

* இந்த 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் உள்ளன.

* ஆண்கள் மட்டுமின்றி பெண் அவசரகால உதவியாளரும் இயக்கும் வகையில், இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இந்த வாகனங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

* விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து, உயிர் மீட்பு, ஆக்சிஜன் வழங்குவது, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் உயிர்காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன் இந்த வாகனங்கள் செல்லும் என்பதால் மருத்துவ உதவியும் முன்கூட்டியே கிடைக்கும்.

* இந்த இருசக்கர உதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக் கூடிய ஆக்சிஜன் சிலிண்டரும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் சூட்டை அறியும் கருவிகளும், தேவையான மருந்துகளும் இருக்கும்.

* இந்த வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் இந்த வாகனத்தில் இருக்கும்.

* அவசரகால அழைப்பு ‘108’ அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும், பாதிப்பின் தன்மைக்கேற்ப இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்படும். பாதிப்பின் தன்மையை அறிந்து முதலுதவி அளிக்கப்படும். பாதிப்பு அதிகமாக இருப்பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* இந்த வாகனங்கள், முதல்கட்டமாக சென்னையில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

* பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

அவசரகால வாகனங்கள்

* தமிழகம் முழுவதும் 755 அவசர கால ‘108’ ஆம்புலன்ஸ்கள் தவிர, 66 பச்சிளம் குழந்தைகள் சிறப்பு அவசரகால வாகனங்கள், 78 மலை யோரம் மற்றும் மணற்பாங்கான பகுதிகளில் இயங்கும் சிறிய ரக அவசரகால வாகனங்கள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in