

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எதுவாக இருந்தாலும் அதை சட்டரீதியாக நாங்கள் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, தான் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனடிப்படையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனம், நட்சத்திர ஓட்டல், திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, உறவினர் மற்றும் கட்சியினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 17 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை முடிவில், கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.34 லட்சம் ரொக்கமும், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், 47 கிராம் எடையுள்ள வைர நகைகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், பல்வேறு வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு புத்தகங்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான மணல் ஆகியவற்றை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஜோலார்பேட்டை இடையம் பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சோதனை முடிந்து பெரிய, பெரிய சூட்கேஸ்கள், 3 டிராவல்ஸ் பேக், 4 கம்ப்யூட்டர்கள், 2 பிளாஸ்டிக் பைகளில் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸார் உடன் எடுத்துச்சென்றனர். கணக்கில் வராத பணம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நேரத்தை வீணடிக்கவே இந்த சோதனை நடத்தியுள்ளனர். அரசியல் ஆதாயத்தைத் தேட சோதனை நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவினர் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம்.
இங்கு, 5 ஒன்றியச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, இதுவரை அரசியலில் இல்லாத ஒன்று. அரசியல் காழ்ப்புணர்ச்சி பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தசோதனை நடத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்தவே இந்தசோதனை நடத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற சோதனையில் எந்த ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாக சந்திப்போம்’’ என்றார்.