பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் யூனியன் பிரதேசத்தின் வருவாய் பாதிக்கப்படும்: புதுச்சேரி அமைச்சர் கருத்து 

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் யூனியன் பிரதேசத்தின் வருவாய் பாதிக்கப்படும்: புதுச்சேரி அமைச்சர் கருத்து 
Updated on
1 min read

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் யூனியன் பிரதேசத்தின் வருவாய் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

லக்னோவில் இன்று 45வது ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுற்றது. இந்தக் கூட்டத்தில், புதுச்சேரி அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் வணிக வரித்துறை ஆணையர் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவுள்ளதாகக் கூறுகின்றீர்கள். அவ்வாறு கொண்டுவந்தால் மாநில அரசின் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாட் வரி மூலம் மாநிலத்திற்கு 46 சதவீதம் வருவாய் கிடைத்தது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் யூனியன் பிரதேசத்தின் வருவாய் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கடும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரச்சசினை ஏற்படும்.

21-22ல் நிதிபங்கு ரூ.517 கோடி, ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.121.65 பாக்கி தரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியதால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வாட் வரி நடைமுறையில் இருந்தபோது புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் வரை இருந்தது.

2020-21 ரூ.667 கோடி ஜிஎஸ்டி வருவாய் வந்துள்ளது. இதுவே வாட் வரி அமலில் இருந்திருந்தால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.1536 கோடி அளவிற்கு வருவாய் வந்திருக்கும். எனவே ஏற்கனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பதால் 62 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ஜூன் 2022 வரைதான் கிடைக்கும். அதன்பின்னர் மேலும் சிக்கலை புதுச்சேரி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மத்திய நிதிக் குழுவிலும் புதுச்சேரி இடம் பெறவில்லை. இதனால் மத்திய அரசின் பங்கீட்டு நிதியும் கிடைக்கவில்லை. மேலும் பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக மத்திய அரசு கொடுத்துள்ளது. எனவே மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in