Published : 17 Sep 2021 06:56 PM
Last Updated : 17 Sep 2021 06:56 PM

வடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை

மதுரையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த 'ஸ்மார்ட் சிட்டி' ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இந்த திட்டத்தால் பேருந்து நிலையத்தையே காணவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டினார்.

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இணைத் தலைவர் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏக்கள், தளபதி (திமுக), வி.வி.ராஜன் செல்லப்பா (அதிமுக), பூமிநாதன் (மதிமுக), தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடந்த தவறுகள், அதனை எப்படிச் சரிசெய்யலாம் என்பன உள்ளிட்ட விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட்டன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கும், திமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்திற்குப் பின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘மதுரை மக்களை எச்சரிக்கிறேன். இன்று இருக்கிற சூழ்நிலையில் பேருந்து நிலையத்தைத் திறந்தால் உறுதியாக மதுரையில் நகரப் போக்குவரத்து நகராது. பெரியார் பேருந்து நிலையம் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தில் 1,100 இருசக்கர வாகனங்கள், 110 கார்கள், மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில் 5000 இருசக்கர வாகனங்கள், 450 கார்கள் நிறுத்தப்பட உள்ளன. மேலும் அந்தப் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தில் பல நூறு கடைகள் உள்ளன. இவை செயல்பட ஆரம்பித்தால் பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் முன்பை விட மிகப்பெரிய நெரிசல் ஏற்படும். இதையெல்லாம் ஏன் ஆய்வு செய்யாமலே இந்தத் திட்டத்தை ஆரம்பித்தார்கள்?

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், ஸ்மாரட் சிட்டி ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டமே தற்போதுதான் நடக்கிறது. கடந்த ஜனவரியில்தான் முதல் முறையாகக் கூட்டம் நடந்தது. மேயரும், கவுன்சிலர்களும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு ஆலோசனைகளையும் கேட்கவில்லை. அப்படியென்றால், இந்த திட்டத்தைச் செயல்படுத்த யார் முடிவெடுத்தார்கள். எதற்காக முடிவெடுத்தார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

சு.வெங்கடேசன் எம்.பி.பேசுகையில், ‘‘பெரியார் பேருந்து நிலையம் நகரமைப்பு அனுமதியே இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதுவே தனியார் செய்திருந்தால் அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டுவிடும். மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்டுவிட்டதால் பெரியார் பேருந்து நிலையம்போல் அனைத்து நிறைவு பெறும் திட்டங்களிலும் புதிதாக என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், மக்களுக்காக, நகர நலனுக்காக சிறப்பாக என்ன செய்யலாம் என ஆய்வு செய்தோம்.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று காமெடியாக சொன்னதுபோல் நிஜமாகவே மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் ஏற்கெனவே இருந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தைக் காணவில்லை. பேருந்து நிலையமே வணிக நோக்கத்திற்காக அழிக்கப்பட்டு மேலும் நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் தேர்வு அடிப்படையிலே தவறுகள் நடந்துள்ளன. மற்ற மாநகராட்சிகளில் நிறைவேற்றப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களில் 80 முதல் 90 திட்டங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், மதுரையில் வெறும் 14 திட்டங்கள், எல்லோமே பெரிய தொகையில் செய்யப்படுகின்றன. அதன் தரம் உரிய விதிமுறைகளோடு செயல்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை அரசின் பிற நிறுவனங்கள் விசாரிக்கும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x