Published : 17 Sep 2021 06:29 PM
Last Updated : 17 Sep 2021 06:29 PM

உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு: அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதை அடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

செப்டம்பர் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அக்டோபர் 16-ம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை இன்று (செப். 17) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால், 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை எனவும், சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில், ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால், தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்கவும், கரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்துப் பணப் பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநிலத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறத் தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x