அரசு நிலங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள்: அரசு விழிப்புடன் செயல்பட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு நிலங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் உருவாகாமல் இருக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதைக் கையில் எடுத்துச் செயல்பட முடியாது எனக் கண்டனம் தெரிவித்து, சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோதக் கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் இன்று (செப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோதக் கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in