Last Updated : 17 Sep, 2021 04:05 PM

 

Published : 17 Sep 2021 04:05 PM
Last Updated : 17 Sep 2021 04:05 PM

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்பட்ட ரெய்டு: கே.சி.வீரமணி

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

திருப்பத்தூர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்ட ரெய்டில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அதைச் சட்டரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, தான் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், கே.சி.வீரமணிக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனம், நட்சத்திர ஓட்டல், திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, உறவினர் மற்றும் கட்சியினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று (செப்.17) காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 17 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவில், கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.34 லட்சம் ரொக்கம், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், 47 கிராம் எடையுள்ள வைர நகைகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், பல்வேறு வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குப் புத்தகங்கள், ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆற்று மணல் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.

ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில் நேற்றிரவு 11 மணியளவில் சோதனை முடிந்து பெரிய, பெரிய சூட்கேஸ்கள், 3 டிராவல்ஸ் பேக், 4 கம்ப்யூட்டர் பேக், 2 பிளாஸ்டிக் பைகளில் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எடுத்துச் சென்றனர். கணக்கில் வராத பணம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காலை முதல் நடைபெற்று வந்த ரெய்டு இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த கட்சியினர் போலீஸார் சென்ற வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று கூச்சலிட்டனர். ஒரு சிலர் அரசு வாகனங்களைத் தாக்கி ரெய்டு நடத்தவந்த அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களை உள்ளூர் போலீஸார் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து, வீட்டுக்குள் இருந்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நேரத்தை வீணடிக்கவே இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். அரசியல் ஆதாயத்தைத் தேட ரெய்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் ரெய்டு நடத்துவது சகஜமான ஒன்றுதான்.

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவது வழக்கம்தான். ஆனால், இங்கு 5 ஒன்றியச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது இதுவரை அரசியலில் இல்லாத ஒன்று. அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்தவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற சோதனையில் எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாக சந்திப்போம்.

தேர்தல் களமாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதித்திலும் அவற்றைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது 100 நாட்கள் கூட இக்கட்சி தாங்காது எனக் கூறினர். ஆனால், அதிமுக 50 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதைப் போல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது".

இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x