

பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்த தினம் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளும் சேவை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த நாளில் நாடு முழுவதும் மக்களுக்குப் பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்த முறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்குப் பல்வேறு தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.