Published : 30 Jun 2014 08:36 AM
Last Updated : 30 Jun 2014 08:36 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலி 17 ஆக அதிகரிப்பு; 24 பேர் மீட்பு

சென்னை அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை, தேசியப் பேரிடர் மேலாண்மை டிஐஜி (தெற்கு) செல்வன் தெரிவித்தார். மழையால் பாதிப்பு இருந்தபோதிலும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இடிபாடுகளிடையே சிக்கிய பெண் ஒருவரை இன்று காலை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆந்திரத்தைச் சேர்ந்த மீனம்மாள் என்ற அந்தப் பெண் உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மீட்புப் படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவியை உயர்த்தினார். | முழு விவரம்:>நிதியுதவி - முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்பு.

மவுலிவாக்கம் விபத்து, மீட்புப் பணி தொடர்பான முந்தைய விரிவானச் செய்தி விவரம்:

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மேலும் 38 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பலியானோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம், சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த72 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் மற்றும் போலீஸார் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமையும் மீட்புப்பணி தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 23 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ஒருவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த நிலையில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 38 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

அவர்கள் அனைவரும் கட்டிடத்தின் தரை தளம் மற்றும் 3-வது தளத்தில்தான் சிக்கியுள்ளனர் என்று மீட்கப்பட்டவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 9-வது தளம் வரைதான் மீட்புக் குழுவினர் துளையிட்டு சென்றுள்ளனர். இன்னும் 5 தளங்களை துளையிட்டு சென்றால்தான் அவர்களை மீட்க முடியும். அதனால், உடனடியாக மீட்பதில் கடும் சிக்கல்கள் உள்ளன.

6 பேர் கைது

மதுரையைச் சேர்ந்த ‘பிரைம் சிருஷ்டி' என்ற தனியார் கட்டுமான நிறுவனம்தான் இந்த கட்டிடப் பணிகளை செய்து வந்தது. கட்டிடம் இடிந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் இன்ஜினீயர்கள் துரைசிங்கம், சங்கர், கட்டுமான மேற்பார்வையாளர் வெங்கடசுப்பிரமணியன், கட்டிட வடிவமைப்பாளர் விஜய் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு காயம் மற்றும் உயிர்பலி ஏற்படும் வகையில் செயல்படுதல் என்பது உள்பட 4 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மட்டுமே விதிக்க முடியும்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

கட்டிடப் பணிகளில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபட்டிருந்த னர். சடலமாக மீட்கப்பட்ட 11 பேரில் 7 பேர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களி லும் 17 பேர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுப்பதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. 08922-236947, 09491012012 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

மீட்கப்பட்டவர்கள் பெயர் விவரம்:

பஞ்சாரம், அப்பாவு, பிரபு, ராஜீ, பூமி நாதன், பாண்டியன், பால்நாயுடு, சதீஷ், ராஜா, பேய்காமன், சுஜாதா, கந்தசாமி, முத்துப்பாண்டி, மருதமுத்து, செல்லப் பாண்டியன், லட்சுமி, விஜயகுமார், பவானி, செல்வி. மீட்கப்பட்டவர்களில் 3 பேர் தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளனர்.

இறந்தவர்களின் பெயர் விவரம்:

மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி (25), ஆந்திரத்தைச் சேர்ந்த சங்கர் (27), சாந்தகுமாரி (25), கவுரி (27), ராமு (36), நாக்பூரைச் சேர்ந்த அமீர்குமார் (28), சென் னையைச் சேர்ந்த கணேசன் (38), லோக நாதன். மேலும் ஒரு பெண் உள்பட 3 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை.

மீட்பு பணிகளை முதல்வர் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை மாலை மவுலிவாக்கம் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு நடக்கும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கூறியதாவது:

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 72 பேரில் 31 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் உயிருடன் உள்ளனர். காயம் அடைந்துள்ள அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டிடத்துக்கு சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததில் விதிமீறல் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், அதன்பின்னர் கட்டிடம் கட்டும்போது கான்ட்ராக்டரால் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடிந்த கட்டிடத்துக்கு அருகே இருக்கும் மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x