

தமிழகத்தில் இதுவரை 83 மாணவர்கள் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ராமசாமி படையாட்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ, மாணவிகளின் தொலைபேசி, அலைபேசி விவரங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மனநல மருத்துவர்களால் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 800மாணவர்களிடம் அழைப்பு பெறப்பட்டு, 364 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் நீட் தேர்வு பற்றி ஏட்டிக்குப் போட்டியாக பேசி மாணவர்களை குழப்ப மாட்டோம்.தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில்உள்ள 9 மாவட்டங்களிலும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை தொடர்ந்து மேற்கொள்ள, மாநிலதேர்தல் ஆணையரிடம் மருத்துவத்துறை கோரிக்கை வைக்கும். அவர்ஒப்புதல் அளித்தால், திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 83 மாணவர்கள் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒட்டுமொத்த மாணவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற பீதியை, பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1,693 பேருக்கு கரோனா
தமிழகத்தில் நேற்று புதிதாக 936 ஆண்கள், 757 பெண்கள் எனமொத்தம் 1,693 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 206 பேர், சென்னையில் 202 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்புஎண்ணிக்கை 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 1,548 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 16,756 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார்மருத்துவமனைகளில் நேற்று 25 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.